தங்கள் வரவு நல்வரவாகுக!!

தங்கள் வரவு நல்வரவாகுக!!

உவகை உவகை தமிழ்த்தாயின் விழா! வந்து குவியுதுபார் நெஞ்சில் உவகை உவகை!! மணமிகுந்தே இனிமை மண்டும் தமிழ்மொழியால் ஓதி நானிலத்தில் எவருங்கண்டு மகிழுமாறு தொண்டுபுரியும் தமிழ்ப்பிள்ளைகளைப் பாரீர்; நீவிர்தம் வரவினைக் கரம் கூப்பி வணங்கியேற்கும் பெருமிதம் காணீர்! அமெரிக்கத் தமிழ்விழா 2017இக்கு வருகை புரியும் கயனா நாட்டுப் பிரதமர் மாண்புமிகு மோசசு வீரசாமி நாகமுத்து, பாராளுமன்ற உறுப்பினர் டி.இராஜா, அமெரிக்கக் காங்கிரசுமேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி, திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, திரு வெ.பொன்ராஜ், திரு.சிவகார்த்திகேய சேனாபதி, பண்ணிசை கோ.ப.நல்லசிவம், நிகழ்த்துகலை பேராசிரியர் இராஜூ, முனைவர் சமணராஜா, முனைவர் கலா.பினுகுமார், முனைவர் எஸ்.சந்தோஷ், மக்களிசை ஜெயமூர்த்தி உள்ளிட்ட எல்லா விருந்தினர்களையும் பேரவை ஆர்வலர்களையும் வணக்கத்துடன் இன்முகம் கொள்வதில் விழாப்பணியாளர் குழுவினர் பெருமகிழ்வு கொள்கிறோம்.

தமிழ்விழாவில் இடம்பெறுகிற மக்களிசை, மரபிசை, மருதநாயகம் மரபுநாடகம், பண்ணிசை, கவியரங்கம், கருத்துக்களம், தமிழ் விநாடி வினா, தமிழ்த்தேனீ, குறள்தேனீ, சாரங்கதாரன் நாடகம், மரபுக்கலைகளின் ஆர்ப்பரிப்பு, தமிழிசைக் கருவிகளின் ஓங்காரம், தமிழ் முனைவோர் மாநாடு, பல்வேறு இணையரங்க நிகழ்ச்சிகளென அனைத்தும் கண்டு களித்துப் பயனுறுமாறு நீவிர்யாவரும் வேண்டப்படுகிறார்கள்.

தமிழர்கலைகளைப் போற்றுவோம்! தமிழ் மரபை மீட்டெடுப்போம்!! தமிழின் பெருமையை மறந்துவிடின் தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்; ஆதலின், தமிழன் குரலொடு ஆர்த்திடுவோமெனச் சூளுரைத்து, திருவிழாக் கோலம் பூண்டு நாமனைவரும் விழுமியமெய்துவோமாக!!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை,

மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கம்.