சாரங்கதாரன் நாடகம்

Main Auditorium
தமிழ் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமி 150 ஆவது ஆண்டு ஆண்டின் நினைவில் சிகாகோ தமிழ்ச்சங்கம் வழங்கும் சாரங்கதாரா மேடை நாடகம்

சங்கரதாஸ் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி என்ற சிற்றூரில் 7.9.1867ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் தாமோதரன், தாயார் பேச்சியம்மாள் ஆவர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே தம் வாழ்நாளை வாழ்ந்து முடித்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதனாலேயே இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவையாகத் திகழ்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டிருந்த நாடகக் கலையை உயர்த்திப் பிடித்தது மட்டும் அல்லாமல் தம் காலத்துக்குப் பின்னரும் உயர வேண்டிய நாடகக் கலையைத் தம் நாடகங்கள் மூலம் நிலை நிறுத்தினர். உண்மையில் சுவாமிகளின் நாடகங்கள்தாம் அவர் காலத்துக்குப் பின்னரும் நாடகக் கலைக்கு உயிரூட்டி வந்தன. இவ்வாறு தமிழ் நாடக உலகில் பெரும் தொண்டாற்றித் தமிழ்நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்தித் தந்த சங்கரதாஸ் சுவாமிகள் தம் 55ஆம் வயதில் காலமானார். 13.11.1922ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் மரணம் அடைந்தார். தமிழ்நாடகக் கலையின் இமயமலையென வர்ணிக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் நூற்றியைம்பதாவது ஆண்டு விழாவினையும் பேரவை போற்றி மகிழ்கிறது.

விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சிக்கு கிழகே நான்கு மைல்தூரம் சென்றால், வெள்ளாற்றங்கரையின் இருக்கிறது கார்மாங்குடி. இப்பகுதியை மன்னன் நரேந்திரன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் சாரங்கதாரன். இளவயதுச் சாரங்கதாரனை, மன்னனின் இளவயது மனைவியான சித்ராங்கி என்பவள் விரும்புகிறாள். சிற்றன்னையின் வீபரீதமான ஆசையைத் தெரிந்து கொண்ட சாரங்கதாரன் இசைவளிக்காது மறுக்கிறான். ஏமாற்றமுற்ற சித்ராங்கி, சாரங்கதாரனைப் பற்றிப் புறங்கூறி தண்டனைக்குள்ளாக்குகிறாள். அதன் விளைவாக, சாரங்கதாரனுக்கு கால் வெட்டப்படுகிறது. பாதிக்கப்பட்ட சாரங்கதாரனின் கால்வெட்டப்பட்டதாகக் கருதப்பட்ட இடம் கால்வாங்குகுடி என இன்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளாற்றின் கரையிலிருக்கிற ஏழு வழிபாட்டுத்தலங்களையும் பூசித்துவந்த சாரங்கதாரனுக்கு பழுதான கால் கூடிவரப் பெற்று இயல்புக்காளாகிய இடம் கால்கூடல் என அழைக்கப்படுகிறது. இக்கதை இசைநாடகமாகவும் ‘நவீன சாரங்கதாரா’ எனும் திரைப்படமாகவும் படைப்பாக்கம் பெறப்பட்டுள்ளது.

சுருக்கவுரைக்கு அப்பாற்பட்டதை அரங்க மேடையில் அருமையாய்ப் பார்க்க, பேரவைத் திருவிழாவுக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறோம்.