மக்களிசை, மரபிசை, மரபுக்கலையோடு – மண்வாசம்

Main Auditorium

கணீர்க் குரலில் பல பரிமாணங்களை எட்டிய நமது அருமைப் பாடகர் திரு ஜெயமூர்த்தி அவர்களின் பாடலைப் பேரவை மேடையில் கேட்க, உங்களைப் போலவே யானும் ஆவலாக உள்ளேன். திரையுலகிலும் மேடை நிகழ்வுகளிலும் தனக்கென்று தனி ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் இவர். இவரின் குரல்தானென்று உணராமலேயே நாம் ரசித்து மகிழ்ந்த பாடல்கள் பல.

மக்களிசையோடு மரபுக் கருவிகளின் அணிவகுப்பில் அரங்கம் அதிரப்போவது உறுதி. தாயகம் கண்ட ஆதி இசைக் கருவி பறை. அதனோடு, தவில், நாகஸ்வரம், உறுமி, கொம்பு, முரசு, சலங்கை, கின்னாரப்பெட்டி, குழல், தாளம் மற்றும் உடுக்கை முதலான பல கருவிகளின் வரிசைகள் நம்மை மெய்மறக்கச் செய்யப் போகின்றன. நமது மரபுக் கருவிகளின் இசைக்கு இசையாத இனமும் இருக்குமோ?

காதுகள் கேட்டு மகிழ்ந்தாடினால் போதுமா? கண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? மக்களிசை முழங்கிக்கொண்டு இருக்கும்போது பாடலின் பொருளுக்கேற்ப காட்சிப்படுத்தவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் நமது பேரவையின் உறுப்பினர் தமிழ்ச் சங்கத்து உறவுகள். ஒரு பாடலுக்கு ஒரு சங்கமெனப் பல்வேறு குழுக்கள் இணைந்து பணியாற்றிக் கொண்டுஇருக்கின்றன.

தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!! என விழாவின் முகப்பு மொழியாக வைத்துவிட்டு, பாட்டும், இசையும் மட்டும் போதுமா? தமிழர் கலைகளைப் போற்ற வேண்டாமா? அவற்றைப் பட்டியலிட்டால் அது காத தூரம் நீளுமே? நாம் மீட்டெடுத்த தமிழர் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து  என பல மரபுக்கலைகளையும் மண்ணின் வாசம் மாறாமல் அரங்கேற்றவும் பல்வேறு தமிழ்ச்சங்கத்து அணிகள் தயாராகிக் கொண்டுள்ளன.

எழுச்சிக்கான ஆட்க்காட்டிப் பாடல், ஈழத்திற்கு குரல் கொடுக்கும் ’எடுத்து அடிடா முப்பாட்டன் பறையை’ போன்ற பாடல்களை, நமது மரபு இசைக்கருவிகளின் அணி வகுப்பிற்கு இடையில் திரு ஜெயமூர்த்தி பாட, தமிழ்ச் சங்கங்களின் ஆட்ட பாட்டம் நாடக நாட்டிய நடிப்புத் திறங்களோடு மரபுக்கலைகளும் அரங்கேற, பேரவையின் முப்பதாவது கோலாகலத் திருவிழாமேடை தயாராகிக் கொண்டுள்ளது.

நம்ம ஊர் திருவிழா… உலகத் திருவிழாவின் பிரம்மாண்டத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் விழா.. அந்த விழாவில் நீங்களும் அங்கம் வகிக்க வேண்டும். இதிலே அணிவகுக்கும் பாடல்களின் பட்டியல்.

பாடல் & இசை மரபுக்கலையும் காட்சியமைப்பும்
அவை வணக்கம்  தமிழ் மன்னர்களின் பேரவை & கட்டியங்காரனின் நையாண்டி கலந்த தெருக்கூத்து.
ஆக்காட்டி ஒப்பாரியும் எழுச்சியூட்டும் நிகழ்க்கலை அரங்கேற்றம்
எலோ மயிலாலே ஆடவரின் ஒயிலான ஒழுங்கையும் வெளிக்கொணரும் ஒயிலாட்டம்
முத்துப்பட்டன் கதைப்பாடல் முத்துப்பட்டன் கதைப்பாடல்: கும்மி கொட்டி ஆடிவரும் நம்குலப் பெண்டிர்
பச்ச பச்ச கிளியப் போல மாட்டு வண்டியின் சந்தத்தில் துள்ளி யாடும் மயில்கள் இரண்டு: மயிலாட்டம்
கடலக் கொள்ள சோடிகள் சேர்ந்து ஆடி அசத்தும் தொழிற்பாடல்: மக்களிசை
ரெட்டை மாட்டு வண்டி காதல் இல்லாமல் கலை உண்டா? காதலின் கலையை சொல்லும் பாடல்: நிகழ்க்கலை
ஆத்தா உன் சேலை ஆத்தாவின் சேலையில் மண்டிக்கிடக்கும் நமது பண்பாட்டு எச்சங்கள்: நிகழ்க்கலை
சிட்டான் சிட்டான் இயற்கை அழகு மற்றும் விதிகளை விளக்கும் குழந்தைகள் நடிக்கும் சிட்டான் குருவி பாடல்.
எடுத்து அடிடா பறையை ஈழ விடுதலை உணர்வு பொங்கும் நிகழ்க்கலை அரங்கேற்றம்
பெருஞ்சித்திரனார் பாடல் சமத்துவம் பேசும் பெருஞ்சித்திரனார் பாடல். கிண்ணாரப் பெட்டி, தவில், கொம்பு மற்றும் தபலா இசையில் : நிகழ்க்கலை
குறவன் குறத்தி பாடல் குறவன் குறத்தி கூடியாடி கொண்டாடும் தமிழர் மரபின் மத்தாப்பு:  குறவன் குறத்தியாட்டம்
காவடிச்சிந்து தவில், நாகசுரம் & பறை முழங்க காவடியாட்டம்
நையாண்டி மேளம் தவில், நாகசுரம் & பறை முழங்க கரகாட்டம்
நையாண்டி மேளம் தவில், நாகசுரம் & பறை முழங்க பொய்க்கால் குதிரை
நையாண்டி மேளம் தவில் & பறை முழங்க புலியாட்டம்

 

 

இசை கலை